2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் வன்முறைகளுக்கெதிராகப் போராடிய டென்னிஸ் முக்வேஜா (Denis Mukwege) மற்றும் நாடியா முராட் (Nadia Murad) ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கொங்கோவைச் சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த நாடியா முராட் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, யுத்தங்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர் என்பதுடன் கொங்கோவில் போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார். அத்துடன் ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை செய்து வந்துள்ள அவருக்கு பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது