ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியமைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில் பொநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உரிய விளக்கமும் அளிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 7 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த 7 ரோஹிங்கியா அகதிகளும் மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியன்மாருக்கு நாடு கடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. சபை இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அதிகாரிகள் தாங்கள் அவர்களை நாடுகடத்த வேண்டாம் என ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது