இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவியின் சாதனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சைகள் வறிய – பின்தங்கிய சூழலில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்காலத்தில் அதன் போக்குகள் மாற்றமடைந்து ஒரு மாணவர்கள் மத்தியில் ஒரு அழுத்தமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இப் போட்டி பரீட்சையின் உண்மையான வெற்றியாளராக முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து அனைவரது பராட்டையும் பெற்றுள்ளார்.
பிறந்து ஒரு வயதாக இருந்தபோது, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தன் ஒற்றை கையை இழந்த நிலையிலும் கல்வியின்மீது கொண்ட தீராத ஈடுபாடு காரணமாக தற்போது அவர் அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
மாணவி ராகினியின் இந்தச் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். போரின் குழந்தையாக முள்ளிவாய்க்காலிருந்து மீண்டெழுந்த ராகினியின் சத்தமற்ற சாதனை அனைவரையும் கண்கலங்கவும் வைத்திருக்கிறது.