Home இலங்கை சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்…

சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்…

by admin

ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்தைய காலம் முதல் பிற மத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் 2009இற்குப் பின்னர் இப் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈழத் தமிழர்கள் உரிமைக்கான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அவர்களின் மொழி, பண்பாடு, சமயத்தை அழிக்கும் முயற்சிகளை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவர்கள் கடுமையாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அண்மையில் முகப்புத்தகத்தில் குளோபல் தமிழில் வெளியான நேர்காணல் ஒன்றில் ஈழம் என அழைக்கப்பட்டதை குறித்து ஒருவரால் கிண்ணடலாக பதிவொன்று போடப்பட்டிருந்தது. ஈழம் எங்கிருக்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டல் செய்திருந்தார். இலங்கை அரசின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது ஈழம் என்ற சொல். இலங்கை அரசால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களில் ஈழம், ஈழத்து சிவாலயங்கள், ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஈழம் என்றால் எங்கிருக்கிறது என்று தெரியாத ஒரு குறைபாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

என்ன செய்வது? எதில் நக்கல் செய்து பொழுதை கழிப்பதென தெரியாதவொரு அற்பமான நோய். தமிழீழத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் ‘ஈழம்’ என இலங்கைத் தீவு காலம் காலமாக அழைக்கப்படுவது வரலாறு. இதை திட்டமிட்டு மறைத்துக் கேலி செய்வதை வெறும் நோயெனவும் கடக்க இயலாது. ஒரு புறத்தில் பௌத்த பேரினவாதிகள் ஈழத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். மறுபறுத்தில் சிலர் ஈழத்தின் சுதேச பண்பாட்டு அடையாளங்களை மறைத்தழித்து வருவதன் மூலம் பேரினவாதிகளுக்கு ஒத்தாசை செய்கின்றனர்.

ஈழத்தை சிவபூமி என்றார் திருமூலர். அந்தளவுக்கு சிவாலயங்கள் நிறைந்த தீவாக ஈழம் காணப்பட்டிருக்கிறது. ஈழத்தின் நான்கு திசைகளிலும் மையத்திலும் சிவாலயங்கள் உண்டு. இந்த சிவாலயங்கள் ஈழத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றன. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலர் வாழ்ந்தவர் என்றும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் அவர் என்றும் சொல்லப்படுகின்றது. அவர்தான் ஈழத்தை சிவபூமி என்றார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர், மற்றும் சம்பந்தர் தமது பதிகங்களில் ஈழத்தின் ஈச்சரங்களான திருகோணேச்சரம் மற்றும் திருக்கேதீச்சரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர்.

ஈழத் தமிழ் மக்கள் இந்த தீவின் பூர்வீக குடிகள் என்பதற்கு பஞ்ச ஈச்சரங்களே சாட்சிகளாக உள்ளன. இந்த ஈச்சரங்களை சிங்கள பௌத்த மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்புடுகின்றன. தெற்கில் மாத்தறையில் இருந்த, தென்னாவரம் எனப்படும் தொண்டீச்சரம் இன்று முற்றாக அழிந்துபோயுள்ளது. (மாத்தறை மாதுறை என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.) அங்கிருந்த சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் தெற்கு முனையின் மாத்தறை கடலோரத்தில் அமைந்திருந்தது. இத் திருக்கோயில் ‘தேவன்துறை கோயில்’, ‘நாக ரீச நிலாக் கோயில்’ ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் ‘சந்திர மௌலீஸ்வரர்’ என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இதைப்போலவே கொழும்பு இரத்மலானையில் உள்ள நந்தீஸ்வரம் ஆலயமும் போர்த்துக் கீசரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. அது ஈழத்தின் ஈச்சரங்களில் ஒன்று என்ற வரலாறே இன்று மறைக்கப்பட்டுவிட்டது.

அந்நியர்களால் அழிக்கப்பட்ட இந்த ஆலயங்களின் வரலாற்றை ஒரு கதையாக பேசுவதைப் போல எதிர்காலத்தில் ஈழத்தின் எந்த ஈச்சரங்களுக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. எனினும் இப்போது, எஞ்சிய ஈச்சரங்களை நோக்கி சிங்கள பௌத்த மயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. முன்னேச்சரம் ஆலயம்மீது பௌத்த பிக்குகளின் கடுமையான தலையீடுகள் காணப்படுகின்றன. அந்த ஆலயத்தின் வழக்காறுகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

ஈழத் தலைநரான திருகோணமலையில் அமைந்திருக்கும் திருகோணேச்சரம் ஆலயத்தின் வாசலில் விகாரையும் புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர்சிலைகள் குடியேற்றப்பட்டுள்ளன. கந்தலாய் என்ற தமிழர் பூர்வீக நிலமும் இன்று சிங்கள பௌத்தமயமாகிவிட்டது. அத்துடன் மன்னாரில் கேதீச்சர ஆலய சூழலிலும் விகாரைகள் புத்தர் சிலைகளை திணித்து ஆக்கிரமிக்கும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இங்கு ஆலயத்திற்குரிய பல ஏக்கர் காணிகளை அபகரிக்கப்பட்டுள்ளது.

நகுலேச்சரம்..

இதைப்போலவே, யாழ்ப்பாணத்தில் நகுலேச்சரம் ஆலயம் அமைந்துள்ள பகுதி, நெடுங்காலமாக இலங்கை இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஈழத்தின் தொன்மை மிகுந்த, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பௌத்த சிங்களமயமாக்கல் முயற்சிகள் ஒரு போர் நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றன. மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி சிவபூமியை சிங்கள பூமியாக்கும் ஒரு சூழ்ச்சிகரமான நடவடிக்கையே.

குருந்தூர்

அண்மைய காலத்தில் முல்லைத்தீவில் குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலையை ஆக்கிரமிக்க பௌத்த பேரினவாதிகள் கங்கனம் காட்டியுள்ளனர். எனினும் முல்லைத்தீவு இளைஞர்கள் இந்த விடயத்தில் தொடர்ந்து விழிப்பாய் இருப்பதுடன் அவர்களை விரட்டியடித்து மண்ணின் அடையாளம் காக்கும் நடடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலிலேயே ஈழத் தமிழ் மக்களின் சைவ ஆலயங்கள் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அவைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களை புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அப் புனித பிரதேங்களில் பிற மத அடையாள திணிப்புக்களை முன்னெடுப்பதை தடை செய்ய வேண்டும். தலதா மாளிகளையில் ஒரு சைவ ஆலயம் ஒன்றையோ, சைவ கடவுளின் சிலை ஒன்றையோ நிறுவ இயலுமா? ஆனால் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை சொருகுவது என்பது மிகவும் இயல்பாக இடம்பெறுகின்றது. இராணுவ அதிகாரம் கொண்டும், அரச அதிகாரம் கொண்டும் பேரினவாத அதிகாரம் கொண்டும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பலவற்றை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை அரசிதழ் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இராணுவத்தினர் பல்வேறு இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து, விகாரைகளை கட்டி எழுப்பியுள்ள நிலையில் எஞ்சிய நிலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு அடையாளங்களை நிறுவ முயற்சிகளை மேற்கொள்ளுகின்றதா? வடக்கில் பல இடங்களில் பாரிய விகாரைகளை கட்டி பௌத்தமயப்படுத்த நல்லாட்சி அரசு திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை

தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கவும், அவர்களின் உரிமையை மறுக்கவும், அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கவும் புத்தரையும் ஒரு ஆயுதமாக சிங்கள தேசம் கையாள்கிறது. இதற்கான பாரிய முயற்சிகளில் நல்லாட்சி அரசு என சொல்லிக் கொள்ளும் இன்றைய அரசும் முயல்கிறது. இந்த அநீதிகள் யாவற்றுக்குமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய நிலையில் தற்போது மீண்டும் அந்த வேலைகளை தமிழ் மண்ணில் அரசாங்கம் மேற்கொள்ளுவது தமிழர்களை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கும் செயல்.

தமிழ் மக்கள் மதவாதிகளல்ல. அவர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். சக மதங்களை மதிக்கும் பின்பற்றும் போக்கு கொண்டவர்கள். பௌத்தத்தைக்கூட முன்னைய காலத்தில் பின்பற்றியவர்கள். ஆனால் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சைவ ஆலயங்களையும் வைசத்தையும் அழிக்க முற்படும் முயற்சிகள் நடப்பதால் தமிழ் மக்களால் தமது வழிபாட்டு மற்றும் பண்பாட்டு முறைகளையும் ஆயுதங்களாக கையாள வேண்டிய அவசியம் ஏற்படடுள்ளது.

எதற்காக இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனரோ, எதற்காக சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றனவோ, அதற்காகவே சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர் சூழலில் பௌத்த அடையாளங்களை திணிக்கப்படுகின்றன. ஈழக் கனவை சிதைத்துவிடுவதும் தமிழர்களை இத் தீவில் ஒடுக்கி அழித்து விடுவதுமே இதன் இலக்கு. எந்தக் காரணங்களுக்காக தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்களோ, அந்த ஆக்கிரமிப்புக் காரணங்களே, இனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளைகளாகவும் இனப்பிரச்சினையை தீர்த்துக் கட்டும் ஆயுதங்களாகவும் வழியாகவும் இலங்கை அரசால் பயன்படுத்துகிறது .

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran October 8, 2018 - 11:03 am

அரச அடக்கு முறையும் தமிழ் இன அழிப்பும் தொடர்கின்றது. இதை மாற்றி அமைக்க வேண்டும்.

1. தமிழர் சார்பான மனப்பாங்கை உருவாக்க வேண்டும்.
தமிழர் சார்பான மனப்பாங்கை சிங்களவர்கள் மத்தியில் தொடர்ச்சியாக உருவாக்க வேண்டும். இதற்கு தமிழர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமான நல்லிணக்கம் மூலம் ஒரு திட்டத்தை தீட்டி அமுல் படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தர், சர்வேஸ்வரன், சுமந்திரன், மாவை, செல்வம், சுரேஷ், சித்தார்த்தர், விக்னேஸ்வரன், கஜன், ஆனந்த சங்கரி மற்றும் அக்கறை உள்ள தமிழர்கள் குறிப்பிடும் சிங்கள பிரதேசங்களில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அல்லது வேறு வழிகள் மூலம், தமிழர் சார்பான மனப்பாங்கை உருவாக்க வேண்டும்.

2. அடக்குமுறைக்குள் தமிழனாக வாழ வேண்டும்.
அடக்குமுறைக்குள் தமிழனாக இருக்க தமிழர்களின் அதி சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதற்கு தாங்கள் வாழும் வீட்டிலும் படிக்கும் பள்ளிகளிலும் தமிழர்களின் அடையாளச் சின்னம் (குறியீடு), மொழி, விழுமியம், நம்பிக்கை, நடைமுறை, வழக்கம், பழக்கம், நல்லொழுக்கம், ஓழுக்கக் கேடு, விதி, சட்டம், எதிர்பார்ப்பு, அறிவு, திறன், பங்கு, ஓவியம் மற்றும் சிற்பம் என்பவற்றை தெரிந்து, பொருத்தமானவற்றை பின்பற்றி, மேம்படுத்தி, பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக கொண்டு சென்று, அடக்குமுறைக்குள்ளும் தமிழனாக வாழ உதவும் அதி சிறந்த வாழ்க்கை முறையை அமைத்து வாழ வேண்டும்.

3. வரலாற்றை தமிழர்கள் அறிய வேண்டும்.
தமிழர்களின் வரலாறு பற்றி ஆராய்ச்சிகள், மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பயிற்சிகள், வகுப்புகள், கண்காட்சிகள், மற்றும் போட்டிகள் என்பவற்றை உலகளவில் நடத்தி எல்லோரும் அறியச் செய்ய வேண்டும்.

4. உலக செல்வாக்கு அடைய வேண்டும்.
தமிழ் உணர்வுள்ள, திறமை வாய்ந்த தமிழர்கள், எல்லாத் துறைகளிலும் அதி உயர்நிலையை அடைந்து, உலகளவில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாக மாறி தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவ வேண்டும். இதற்கு தாங்கள் வாழும் நாடுகளில் ஜனாதிபதி, பிரதம மந்திரி, வெளியுறவு மந்திரி மற்றும் செல்வாக்குமிக்க பதவிகளை வகிக்க பெரு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மேலே கூறியவற்றை தமிழர்கள் பின்பற்றுவார்களானால் அவர்கள் முழு உரிமைகளுடன் வளமான வாழ்க்கையை அமைக்க அவைகள் உதவும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More