ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 8,10,13,16 ஆகிய திகதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் ந டைபெறும் எனவும் பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் திகதி முதல் 9 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது.
அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய இந்த வார்டுகளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதுடன் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.