நக்கீரன் கோபாலை ஐபிசி 124ஆவது பிரிவின் கீழ் கைது செய்தமை ஏற்புடையதல்ல என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே, சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதனையடுத்து அவர் காவல்நிலைய வாயிலில் போராட்டம் ;கொண்டார்.
வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க கோரியும் மறுப்பு தெரிவித்த காவல்துறையை அவர் கடுமையாக கண்டித்ததைத்தொடர்ந்து வைகோவும் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு நக்கீரன் கோபால் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு மருத்துவசோதனையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது, நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த இந்து என்.ராம், நீதிமன்றத்திற்குள் அனுதிக்கப்பட்டார். பின்னர் நீதிபதியின் அழைப்பின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இந்து என்.ராம் கருத்து தெரிவித்தார். அதில், ஐபிசி பிரிவு 124 இந்த வழக்கில் செல்லுபடியாகாது என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்றால் தவறான முன்னுதாரனமாகிவிடும் என்றும் தெரிவித்தார்..
இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி கோபிநாத், 124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்றார். மேலும், நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். விடுதலையை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்த போது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதி நின்றது. துணைநின்ற அனைவருக்கும் நன்றி என அவர் கூறினார்.