5லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களின் இரகசிய தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகின்ற ‘கூகுள்’ தேடல் இணையத்தளத்தின் ஒரு அங்கமான ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள பயனாளர்கள்; 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் இரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த தகவல் திருட்டு பற்றி த வோல் ஸ்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிகை வெளியுலகுக்கு கொண்டு வந்திருந்தது.
இதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை உடனடியாக மூடப்பட்டு விடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும் என அந்த சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
முகப்புத்தக சமூக வலைத்தளமும், தனது பயனாளர்களின் இரகசிய தகவல்கள் திருட்டு போனதால் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.