குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தமது பூர்வீக வாழ்விடங்கள் தமக்கு கிடைக்குமென எதிர்பார்த்திருந்த போதும் தமது வாழ்விடத்தை தாங்களே போராடிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு உரிய பதில் கிட்டாவிட்டால் போராட்டத்தை உக்கிரப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி 588 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்கள் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இதில், தமது வாழவிடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு மாற்றுக்காணியில் குடியமர்த்தப்பட்டிருந்ததாகவும், அங்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லை இல்லை எனவும், தமது பூர்வீக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது பூர்வீக வாழ்விடம் தங்களுக்கு வேண்டும். தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் தாங்கள் நிம்மதியாக வாழவேண்டும். பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் எந்தப்பலனும் கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தமது பூர்வீக நிலத்தை கோரி வீதியில் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டம் ஆரம்பித்து 303 ஆவது நாளில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. அதற்கு தாங்கள் நன்றிகளைத்தெரிவிப்பதாகவும் கூறினர்.
நல்லாட்சி அரசினாலும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவ்வாறு 104 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், பாடசாலை, முன்பள்ளி, பொது மைதானம் உள்ளடங்கிய அனைத்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. மழை வெயில் இயற்கை அனர்த்தங்கள் மத்தியில் வீதியில் போராடும் எமக்கு எமது உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்றும் தமது கடித்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை காண வேண்டும் என்றும் விரைவில் தமது நிலங்கள் முழுவதும் விடுவிக்கப்படாத பட்சத்தில் போராட்டத்தை உக்கிரப்படுத்தப் போவதாகவும் அதன் விளைவுகளை அரசாங்கம் அனுபவிக்க நேரிடும் என்றும் கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.