குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னாருக்கு சென்று மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடு அகழ்வு பணியை பார்வையிட்டனர்.
சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம் பெறும் வளாகத்திற்கு சென்றனர்.
குறித்த குழுவில் சட்டத்தரணிகள், தடவியல் நிபுணர், பேராசிரியர்கள் உள்ளடங்களாக இரு பெண்கள் உற்பட 7 பேர் அடங்குகின்றனர்.
அகழ்வு பணிகள் இடம் பெறுகின்ற வளாகத்திற்குள் சென்ற இந்தக் குழுவினர் அகழ்வு பணிகளை தலைமை தாங்கி மேற்கொண்டு வரும் விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வை சந்தித்து உரையாடினர்.
இதன் போது அகழ்வுப்பகுதி வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ விளக்கமளித்தார்.