குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டரீதியான பிரச்சனைகளை முன்னெடுக்க சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் அக் கருத்து முன் வைக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் வழக்குகள் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் போது முன்னிலையாவதற்கு சட்டத்தரணிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது. அதனால் சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து சட்டவாளர்கள் குழாம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் முன் வைக்கப்பட்டது.
அதன் போது அரசியல் கைதிகளின் விடுதலையை சட்ட பிரச்சனையாக பார்க்காது , அரசியல் பிரச்சனையாக பார்க்குமாறும் அவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தாம் தற்போது சட்டத்தரணிகள் குழாமை ஒருங்கமைப்பது சாத்தியமாகாது. ஆனாலும் அதனை பிறிதொரு செயற்திட்டமாக முன்னெடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.