இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, ஒக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை.
அவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான சான்றை துருக்கி உளவுத்துறை அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளதாக இது தொடர்பாக புலனாய்வு செய்துவரும் குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்து வரும் சௌதி அரேபியா, இந்த பத்திரிகையாளர் வந்த வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுகிறது.
ஜமால் கசோஜி காணாமல் போய்விட்டதும், அவர் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களும் சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. சௌதி அரேபியாவின் மீதான நம்பிக்கைக்கு இது பெருங்களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்ஜின் விண்வெளி நிறுவனங்களில் செய்கின்ற ஒரு பில்லியன் சௌதி முதலீடு பற்றிய பேச்சுவார்த்தைகளை தொழிலதிபர் சர் ரிச்சர்டு பிரான்சன் நிறுத்தியுள்ளார். இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் சௌதி அரேபிய முதலீட்டு மாநாட்டில் இருந்து பல உயரிய வணிகத் தலைவர்கள் விலகியுள்ளனர்.
ஒலிப்பதிவு மற்றும் காணொளிகள் வெளியிடுபவை
இந்த துணை தூதரகத்திற்குள் தாக்குதலும், போராட்டமும் நடைபெற்றுள்ளதை சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் இருப்பதை துருக்கி பாதுகாப்பு வட்டாரம் ஒன்று பிபிசி அரபி சேவையிடம் உறுதி செய்துள்ளது. துருக்கி அதிகாரிகள் தவிர வேறு யாராவது இந்த சான்றுகளான ஒலிப்பதிவை கேட்டுள்ளனரா, காணொளியை பார்த்துள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.
கசோஜியை ஆட்கள் அடிப்பதை கேட்க முடிகிறது என்று ஒருவர் கூறியதாக வோஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிடுகிறது. கசோஜி இந்தப் பத்திரிகையில் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.
கசோஜி கொல்லப்பட்ட தருணத்தை காட்சிப்படுத்திய காணொளி இருப்பதாக கூறப்படுகிறது என துருக்கி அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பத்தி எழுத்தாளர் கமால் ஒஸ்டுரக் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்,
ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகவே அவர் இந்த தூதரகத்துக்கு சென்றுள்ளார்.
பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கமராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது. கறுப்பு வான் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.
செளதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.
இனி நடப்பது என்ன?
கசோஜியை காணவில்லை என்று கூறிவந்த துருக்கி அதிகாரிகள் அவர் கொல்லப்பட்டுள்ளதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். சௌதி அரேபியாவோடு கூட்டாக புலனாய்வு மேற்கொள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதால், சௌதி பிரதிநிதி குழு ஒன்று வெள்ளிக்கிழமை துருக்கி வந்தடைந்துள்ளது. இந்த வார இறுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் அது கலந்துகொள்ளும்.
இரு நாடுகளுக்கு இடையில் ராஜீய உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதற்கு சௌதி மன்னர் விரும்புவதால், சௌதி அரச பரம்பரையின் மூத்தவரான இளவரசர் கலீல் அல் ஃபைசல் துருக்கிக்கு குறுகிய பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.
கசோஜி காணாமல் போயிருப்பது சௌதியின் புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நற்பெயருக்கும், உலக நாடுகளோடு சௌதியின் உறவுகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று துருக்கியிலுள்ள பிபிசி செய்தியாளர் மார்க் லுவென் கூறியுள்ளார்.
BBC – படத்தின் காப்புரிமைEPA , GETTY IMAGES, AFP/GETTY IMAGES