வங்கி முறைகேடுகள், வாடிக்கையாளர்களை சரியான முறையில் நடத்தாமை போன்ற காரணங்களினால் அவுஸ்திரேலியாவின் முக்கிய வங்கியான ஏ.என்.சட் (ANZ ) வங்கி 200 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் முதல்தர 4 வங்கிகளில் ஏ.என்.சட் வங்கியும் உள்ள நிலையில் இது தொடர்பில் அந்த வங்கியின் நிறைவேற்று அதிகாரி ஷேய்ன் எலியட் (Shayne Elliott) அளித்த வாக்குமூலத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களை மோசமாக நடத்தியமை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வாடிக்கையாளர்களை சரியான முறையில் நடத்தாத ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து வங்கி போதிய கவனம் செலுத்தவில்லை என்பதனை நாடாளுமன்றத்தில் எலியட் ஒப்புக் கொண்டுள்ளார்.
இறந்து போனவர்களின் கணக்குகளில் கூட தேவையில்லாத கட்டணங்களை வசூலித்தமை , தகவல்களை திரிப்பது, வாடிக்கையாளர்களை பெருக்க பொய்த்தகவல்களை அளிப்பது, போன்ற தவறுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது வெட்கக் கேடானது எனவும் தெரிவித்த அவர் இதற்கு சிரேஸ்ட அதிகாரிகளும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.