குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழில். நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இல. 185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இக் கண்காட்சி கடந்த வெள்ளிகிழமை ஆரம்பமானது. குறித்த கண்காட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் , பலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து நாட்களுக்கு நீடித்து உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இக் கண்காட்சியில் விநாயக புராணம், தோம்பு, மாந்திரீகம், சித்த மருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் புராணங்கள், கந்தபுராணங்கள் என 100 க்கும் அதிகமான சுவடிக் கட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறை மற்றும் எண்ணிமப்படுத்தும் முறையும் காண்பிக்கப்படுகின்றன. EAP-1056 திட்டத்திற்கமைவாக 60,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 25,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டுவருகின்றன.
பிரித்தானிய நூலகத்தின் சர்வதேச நியமங்களப் பின்பற்றி முன்னேடுக்கப்படும் இச்செயற்றிட்டம் மூலம் ஆவணப்படுத்த வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.