அசாம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டில் தேயிலை நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் போலி என்கவுண்டர் மேற்கொண்ட ராணுவ அதிகாரிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 9 இளைஞர்களை ராணுவத்தினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இளைஞர்களை நேரில் முன்னிலை செய்யுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய ஐந்து பேரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர் தற்காப்பு முயற்சிக்காக அவர்களை சுட்டதாக விளக்கமளித்திருந்தது. எனினும் இது போலி என்கவுண்டர் எனவும், திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை எனவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூலையில் அதன் இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில் அந்த வழக்கின் மீது சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் போது போலி என்கவுண்டரில் தொடர்புடைய ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த ராணுவ நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.