வரவு செலவு திட்டத்தினை நிராகரிப்பதற்கான எண்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆனால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால், அந்த சந்திப்பின் பின்னரே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இன்று (15.10.18) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பல விடயங்கள் செய்து முடிப்பதாக சொன்ன விடயங்களை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை. எல்லாவற்றினையும் தொட்டுத் தொட்டு, இருக்கின்றார்கள். இன்னும் பூரணமாக முடிக்கவில்லை.
அரசாங்கம் பல விடயங்களை செய்து முடிக்காமல் இருப்பதனால், வரவு செலவு திட்டத்தினை நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் கூட்டமைப்பின் பலர் மத்தியில் இருக்கின்றது.
வரவுசெலவுத் திட்டம் குறித்து என்ன நிபந்தனைகள் வழங்க வேண்டும் எவ்வளவு காலக்கெடுகள் வழங்க வேண்டுமென்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, என்ன தீர்மானம் எடுப்பார்கள் என்பது தெரியாது.
அந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த சுமந்திரன், தேவையேற்படின், நீதியமைச்சரும், சட்டமா அதிபரும், அழைக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார் எனினும் அந்தக் கலந்துரையாடல், அன்றைய தினம் நடக்குமா அல்லது வேறு ஒரு தினத்தில் நடக்குமா என்பதும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை கொண்டுவர, தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து நகர்வுகளை முன்னெடுத்துள்ளன.. சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி, அந்தப் பிரேரணை நகர்த்தப்படவுள்ளது.கடும்போக்கினை உடைய சிங்கள கட்சிகளும், அமைப்புக்களும், குற்றம் புரிந்தவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கின்றதென்ற பொய்யான பிரச்சாரத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள். அவைகள் திருத்தப்பட வேண்டும்.
நீண்டகாலமாக தடுப்பில் இருக்கின்றார்கள் என்றும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, தண்டணை விதிக்கப்பட்ட காலத்திற்கு அதிகமாக தடுப்பில் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிணை வழங்க முடியாதென்பதாலும், ஏற்கனவே, நீதிமன்ற விசாரணைகளின்றியும், சிறைகளில் இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களை விடுவிக்கும் படியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தம்மை வெறுமனவே விடுவிக்குமாறும், அரசியல் கைதிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. குற்றத்தினை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலம் சிறையில் இருப்பதனால், அதனைக் கருத்திற்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த உண்மைகளை சரியான விதத்தில் சிங்கள மக்களிடம் சொன்னால், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும். இந்த விடயங்கள் விளக்கமின்மையால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளனவே தவிர, நியாயமான முறையில், சிங்கள மக்களுக்கு எடுத்துரைதால், இவர்களை விடுவிப்பதற்கு எந்த சிங்கள மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
1 comment
‘விடுதலைப் புலிகளை அரசாங்கம் விடுவிக்க முயலுகின்றது’, எனக் கடும்போக்குச் சிங்களக் கட்சிகள்போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்குமென்று கூறிப் பிரச்சனையைத் திசைதிருப்ப முயல்வது ஏற்புடையதல்ல. ஜனாதிபதியையே கொல்ல முயன்றவரை ஜனாதிபதி விடுவித்தபோது அப்படியான சம்பவங்கள் ஏதும் நிகழவில்லையே?
மேலும், முதலில் ஜனாதிபதியின் வெற்றிக்கும், தொடர்ந்து வந்த பிரதமரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள், காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த நல்லாட்சி அரசு பெற்றுத் தருமென்று நம்பியே இவர்களை பதவியில் இருத்தினார்கள். அவர்களிடம் உரிய விதத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தெரிவிக்க வேண்டியவர்கள் TNA யின் மக்கள் பிரதிநிதிகளேயன்றி வேறு யாருமில்லை.
காணி மற்றும் போர்க் கைதிகள் தொடர்பில் போராட்டம், உண்ணாவிரதமென உரிமைப் போராட்டங்கள் ஆரம்பிக்குமுன்னரே அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்திருந்தால், இவை தொடர்பான செய்திகள் கடும்போக்குச் சிங்கள மக்களை சென்றடைத்திருக்காதே? மேலும், போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களின் பின்பு பதவிக்கு வந்த இவர்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை/ தளர்வுகளை முன்னுரிமை கொடுத்துச் செய்திருந்தால், பல சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்திருக்காது, என்பதை மறுக்க முடியுமா?