சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக நாளை (17.10.18) முதல் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.
நேற்றைய தினம் முதல் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட இருந்த போதிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அதனை பிற்போட தீர்மானித்ததாக காவற்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நாளை முதல் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக காவற்துறை விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வெளியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் காவற்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளனர்.எதிர்வரும் நாட்களில் வெலிக்கட மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.