சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு தன்னுடைய வழக்கறிஞர்கள் பதிலை தயாரித்து கொண்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரும் முன்னாள் தேர்வுக்குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது நேற்று (15.10.18) குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் 14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஐசிசி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், பணத்திற்காக போட்டிகளை காட்டிக்கொடுத்தல், மைதானத்தை தயார் செய்வதில் மோசடி மற்றும் இது போன்ற குற்றங்களுக்காக சர்வதேச கிரிக்கெட் சபை தன் மீது குற்றம் சுமத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காததிற்காகவே தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களில் தான் எப்போதும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலத்திலும் அவ்வாறே நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிக்கான பதில்களை தன்னுடைய வழக்கறிஞர்கள் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.