சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 89 ஆவது நாளாக இன்று புதன் கிழமை இடம் பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த குணசோகர மன்னார் மனித புதையில் கண்டு பிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் விடுதலை புலிகளின் காலத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள மக்களின் எச்சங்களாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது மனித புதை குழியினை அகழ்வு செய்யும் பனியும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகளே நடை பெறுகின்றன. குறித்த மனித எலும்புக்கூடுகளின் காலப்பகுதி மற்றும் ஏனைய விபரங்களை அறியும் ஆய்வு பணி ஆரம்பிக்கப்படவில்லை. எனவே யாராக இருந்தாலும் மன்னார் புதைகுழி தொடர்பான உண்மை நிலையை அறியாது எந்தவித கருத்துக்களையும் தொரிவிக்க வேண்டாம். முழுமையான ஆய்வின் பின்னர் துல்லியமான தகவல்களை தன்னுடன் இணைந்த குழுவினர் வழங்குவர்.
கடந்த வாரம் மன்னார் மனித புதை குழியை பார்வையிடுவதற்காக வந்த இந்திய சிவில் சமூக உறுப்பினர்கள் வெறுமனே நீதிமன்ற அனுமதியுடன் பார்வையாளர்களாக வந்தார்களே தவிர வேறு எந்த விதமான காரணங்களுக்காகவும் வருகை தரவில்லை.இது வரை 185 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 179 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.