சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு கடுமையான எதிர்ப்புகள் தொடரும் வேளையில், 100 காவல்துறையினரின் துணையுடன் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவிதா என்பவர் தனது பணி நிமித்தம் சபரிமலை ஏறி, ஐயப்பன் கோயில் அருகே சென்றுள்ள நிலையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
அங்கே குழுமியிருந்த போராட்டக்காரர்களுடன் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமை வகித்த காவல்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர்கள் குறித்த பெண் ஊடகவியலாளரை உட்செல்ல அனுமதிக்கவில்லை. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியதை அடுத்து தற்போது முதல் முறையாக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளநிலையில், கடந்த மூன்று நாட்களாக, கோயிலுக்கு வர முயற்சித்த பல இளம் பெண்கள் வரும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையியிலேயே இளம் பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் செய்தி சேகரிப்பதற்காக இன்று சன்னிதானத்தை நெருங்கிய நிலையில், போராட்டம் வலுவடைந்ததனையடுத்து அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.