முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கெதிரான வழக்கை டிசம்பர் 07ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் மேற்படி உத்திரவினை பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் வழக்கினை ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.