ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் நேற்றையதினம் மகளிர் சுவர் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவோம் என ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்;டதுடன் சபரிமலைக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த 11 பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் வழிபாட்டில் சீர்திருத்தங்களை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்து ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கேரள அரசின் ஏற்பாட்டில் ‘வனிதா மதில்’ என்ற மகளிர் மனித சுவர் அமைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
வடகேரளத்தின் காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரை 608 கி.மீ. தொலைவுக்கு 14 மாவட்டங்களிலும் பெண்கள் வரிசையாக ஒருவருடன் ஒருவர் கைகோத்து நின்று மனிதச் சுவரை அமைத்தனர். இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 31 லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர் எனவும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் சில இடங்களில் பண்கள்மீது கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது