குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் நோக்குடன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெடிபொருட்களை யாழ். காவற்துறை விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றுக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடி பொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலின் பிரகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடி படையினர் அங்கிருந்து 01 கிலோ கிராம் நிறையுடைய சி 04 ரக வெடிமருந்து பொதிகள் 7 மீட்டனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்களை அதிரடி படையினர் யாழ். காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த வெடிமருந்து, டைனமெட் போன்ற வெடிபொருட்களை தயாரித்து மீன் பிடிக்காக பயன்படுத்தும் நோக்குடன் அங்கு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக என காவல் நிலைய தகவல் தெரிவிக்கின்றன.
அதேவேளை குறித்த பேருந்து நிலையத்தில் 4 கிலோ கிராமுடைய ரி.என்.ரி. ரக வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ்.காவற்துறை விசேட அதிரடி படையினர் மீட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.