இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி சமர்ப்பிப்பதென, நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடுகள் குறித்த, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை, இம்மாதம் 7ஆம் திகதி, அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும் பொதுச் செலவுக்காக, இவ்வாண்டு அதிகமாக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் அரச வங்கிகளை, அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் கீழ் ஒதுக்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சர்களுக்கான விடயதானங்களை ஒதுக்கும் போது, இதுவரை காலமும் லக்ஷ்மன் கிரியெல்லவின் கீழ் காணப்பட்ட அரச வங்கிகளை, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், வர்த்தமானி மூலமாக, ஜனாதிபதி ஒதுக்கியிருந்தார். இந்நடவடிக்கையை எதிர்த்த கிரியெல்ல, ஜனாதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கை என இதை வர்ணித்திருந்தார்.
எனினும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இவ்விடயத்தில் யாரையும் பழிவாங்க நினைத்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.