குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில்,பொது மக்கள் விழிப்புணர்வுடனும்,வைத்திய ஆலோசனைகளுக்கு அமைவாகவும் செயற்பட வேண்டும் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.
மன்னாரில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (3) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
மன்னார் சுகதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2018 ஆம் ஆண்டு 156 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவ் எண்ணிக்கையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக காணப்பட்டாலும்,தொடர்ச்சியாக நாங்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாத காலப்பகுதியில் மன்னார் நகரப்பகுதியில், பனங்கட்டுக்கோட்டு மற்றும் எமிழ் நகர் பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. குறித்த டெங்கு நோயின் தாக்கத்தினால் 06 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குறித்த இறப்பு தவிர்த்திருக்க வேண்டியது.மிகவும் காலம் தாழ்த்தி வைத்தியசாலையில் அனுமதித்ததன் காரணமாகவே இறப்பு நிகழ்ந்துள்ளதாக கருத இடம் உள்ளது.
தற்போது பனங்கட்டுக்கோட்டு,எமிழ் நகர் பகுதிகளில் பாரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காவல்துறையினர்;, பொது சுகாதார பரிசோதகர்கள்,பொது மருத்துவ மாதுக்கள் மற்றும் ஏனையவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-தொடர்ச்சியாக டெங்கு நோய் பரவாமல் இருக்க தோட்டவெளி, பேசாலை,எருக்கலம்பிட்டி போன்ற பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடையாமல் இருக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளுவது தொடர்பாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வலி ஏற்படும் போது புரூபன்,அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை பாவிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பரசிடமோல் வில்லைகளை வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வழங்கக்கூடாது.
மேலும் உங்கள் வீடுகளில் நுளம்பு பெறுகக்கூடிய இடங்களை அழித்து விட வேண்டும்.வைத்திய ஆலோசனைகளை உதாசீனம் செய்யாது உரிய நேரத்தில் ஆலோசனையை பெற்று உங்களினதும், பிள்ளைகளினதும் விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாத்தக் கொள்ளுங்கள்.
அண்மையில் ஏற்பட்ட மழையின் பின்னர் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.எனவே பொது மக்கள் விழிர்ப்பணர்வுடன் இருக்குமாறும்,டெங்கு நுளம்பு அதிகரிக்க காரணமாக உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.