குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை வடக்கைச் சேர்ந்த மன்னார் பகுதியில் விவசாயப் போதனா ஆசிரியராகக் கடமையாற்றும் ஒருவர் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் நேற்றிரவு 8 மணியளவில் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
வீட்டின் முன்கதவை ஆயுதங்களால் கொத்தி அதனை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு வாள்களைக் காண்பித்து மிரட்டியுள்ளது.
அந்த சமயம் விவசாயப் போதனா ஆசிரியர், அங்கிருந்த இளம் பெண்ணை இழுத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையம் மற்றும் காவல்துறை அவசர சேவை 119 ஆகியவற்றுக்கு பெண்ணின் உறவினர்களால் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் காதல் விவகாரமாக இருக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கொடிகாமம் காவல்துறையினரால் பதிலளிக்கப்பட்டதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, கடத்தல் கும்பலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் துரத்திச் சென்ற போது, கொடிகாமம் சந்தியில் காவல்துறையினர் கடமையிலிருந்த நிலையில் கும்பல், பெண்ணை மோட்டார் சைக்கிளிலிருந்து வாகனத்துக்கு மாற்றி ஏற்றிச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ஆனைக்கோட்டைப் பகுதியில் கடத்தல் கும்பலின் வாகனம் பயணித்த போது, பெண்ணின் அவலக் குரல் கேட்டு அந்தப் பகுதி இளைஞர்கள் வாகனத்தை துரத்தி மடக்கி பெண்ணை மீட்டனர். பெண் மீட்கப்பட்டதை அடுத்து கடத்தல்கார்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.
அந்நிலையில், பெண் கூறிய தகவலின் அடிப்படையில் அவரை யாழ்ப்பாணம் பகுதியில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் நேற்றிரவு 10 மணியளவில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அத்துடன், கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பெண் கொடிகாமம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கை பெறுவது காவல்துறையினரின் கடமை. எனினும் கொடிகாமம் காவல்துறையினர் இன்று நண்பகலுக்கு பின்னரே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தினர். என தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தாமல் அந்தப் பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தியமை தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினரின் மீது பெண்ணின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் கொடிகாமம் காவல் நிலையத்தில் தடுத்துவைத்திருந்த பின்னரே காவல்துறையினர் இன்று மாலை விடுவித்துள்ளனர்.
எனினும் முறைப்பாட்டுக்கு அமைய விவசாயப் போதனா ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வழங்கப்பட்ட போதும் கடத்தல் கும்பலைக் கைது செய்வதற்கு கொடிகாமம் காவல்துறையினர் முயற்சிக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.