குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற சட்டத்தரணி, நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேகநபரை வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தான் பயணித்த வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் சரணடைய வைக்கும் நோக்குடனேயே சட்டத்தரணி அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிலையில் அதனை அறிந்த பருத்தித்துறை காவல்துறையினர் , காவல்துறை புலனாய்வாளர்கள் சட்டத்தரணி அழைத்து வந்த சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கைது செய்ய முயன்றுள்ளனர்.
அதனால் சட்டத்தரணிக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, சந்தேக நபரை காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சட்டத்தரணிக்கு நீதிவான் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சந்தேக நபரை குறித்த சட்டத்தரணி தனது காரில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினரிடம் ; கையளித்தார். அதன் போது சந்தேக நபரின் பிள்ளைகளும் உடனிருந்தனர்.
அதனை அடுத்து சந்தேகநபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்தினார்கள்.
அதனை அடுத்து வழக்கினை விசாரித்த நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பு நடைபெறும் எனவும் அறிவித்தார்.