வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு சென்ற தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையில் இல்லாமல் நாட்டை விட்டுச் சென்றுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி குறித்த விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருவரும் சீனாவைச் சேர்ந்த மூவரும் என 5 வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை சென்றடைந்த பின்னர் அவர்கள் குறித்த விமானத்திலேயே திருகோணமலையிலுள்ள சீன துறைமுகத்தின் இராணுவ முகாம் விமானப் பாதையில் தரையிறங்கியதன் பின்னர் நேற்றையதினம் அங்கிருந்தே சிங்கப்பூர் நோக்கி பயணித்தனர்.
இலங்கைக்குள் வரும் விமானமொன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனில் அனுமதிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திலிருந்து மாத்திரமே வெளியேற வேண்டும். அனுமதியளிக்கப்பட்ட விமான நிலையம் அல்லாத வேறொரு இடத்திலிருந்து அல்லது நாட்டிலிருந்து வெளியேற எந்தவொரு விமானத்துக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்னும் நிலையில், திருகோணமலையிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற குறித்த விமானம் தொடர்பில் விசாரணைகள் செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.