இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்றையதினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு தாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் எனத் தெரிவித்துள்ள சம்பந்தன் நாடு ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டு வருவதற்கான ஆதரவினை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சமயத்தில் மக்களும் பிராந்திய மாகாண அரசாங்கங்களும் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், 2009இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.