போர்க்குற்றச் சாட்டுக்களுக்காக ராஜபக்ஸ குடும்பத்தினரை தண்டிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை தண்டித்து, சிறைக்குள் அடைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது பெரும்பான்மையற்ற அரசாங்கம்தான் இருப்பதாகவும் பாராளுமன்றில் 113 ஆசனங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே இது இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே அரசாங்கத்தை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்தை நடாத்தி புதிய அரசியலமைப்பை கொண்டு வர முயற்சிப்பதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமரன் உள்ளிட்ட தரப்பினர், மகிந்த மற்றும் கோத்தாபயவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை யஸ்மின் சூகாவும் இலங்கை இராணுவத்தின் 57 தலைவர்களை சர்வதேச நீதிமன்றின் ஊடாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் இவையனைத்தும் இன்று சர்வதேச உதவியுடன் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சமமான பயங்கரமான செயற்பாடுகளாக மகிந்த உள்ளிட்ட 47 உறுப்பினர்களை பாராளுமன்றிலிருந்து நீக்கி அதற்குப் பதிலாக புதியவர்களை நியமித்து, புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.