அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது.
அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியுடன் தான் ஓய்வு பெறுவதாக அவர் நேற்றையதினம் அறிவித்துள்ளார்.
உலக வங்கியில் தலைவராகப் பணியாற்றியது மிகுந்த கௌரவத்தை அளிக்கிறது எனவும் ஒவ்வொரு தனிநபரும் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்பதில் ஆர்வமுடன் செயல்பட்டனர்.
உலகம் முழுவதும் ஏழ்மை அதிகரித்துவரும் இந்த வேளையில், பருவநிலைகள் மோசமடைந்து நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அத்துடன் உலகில் , பஞ்சம் அதிகரித்து, அகதிகளின் சிக்கல்கள் அதிகரித்துவரும் இந்தச் சூழலில் உலக வங்கியின் தேவை முன்பை விட அதிகரித்துள்ளது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓய்வுக்குப் பின்னர் வளரும் நாடுகளுக்கான பருவநிலை தொடர்பான ஸ்மார்ட் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான பணியில் ஈடுபடப்போவதாக ஜிம் யாங் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள கிரிஸ்டலினா ஜியார்ஜீவா உலக வங்கியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.