வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இக் காணிப்பு விடுவிப்பு இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த தனியார், அரச காணிகளுடன் வனவளத் திணைக்களத்திற்குரிய காணிகளும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்பாக விடுவிக்கப்படும் என்று படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் அடி்பபடையில் 1099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக ஜயம்பதி கிராம சேவகர் பிரிவின் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 479 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உடையார்கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 120 ஏக்கர் காணிகளும் அதில் அடங்கியுள்ளன. இதேவேளை, மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக வெள்ளங்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 500 ஏக்கர் காணிகளும் இதன்போது விடுவிக்கப்படவுள்ளன. இக் காணிகளை விடுவிப்பதற்கு அமைவாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்களுக்கு காணிகள் தொடர்பான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.