மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான காபோன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபோனில் ஜனாதிபதியாக உள்ள அலி போங்கோ அண்மையில் பக்கவாத நோய் பாதிப்புக்குள்ளாகியதனால் அவர் மொராக்கோவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ஜனாதிபதி நாட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்து, ராணுவ ஆட்சியை அமுல்படுத்த முயன்ற ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் தலைநகர் லிப்ரவில்லேவில் உள்ள தேசிய வானொலி நிலையத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்து அங்கிருந்தவர்களை சிறை பிடித்ததுடன் ஆட்சி கவிழ்க்கப்பட்டு விட்டதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானதையடுத்து தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் வானொலி நிலையத்தை சுற்றிவளைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் அங்கிருந்த கிளர்ச்சி ராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதுடன் அதற்கு தலைமை வகித்தவர் உட்பட 5 வீரர்கள் கைது செய்யப்பட்டு ஆட்சிக்கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது