குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார். கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை. பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை தாண்டிய நெடிய வெற்றிப் போராட்டத்தை இம் மக்கள் நடத்தி வருவது வரலாற்றுச் சிறப்பானது.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகப்போகின்றன என்றால், கேப்பாபுலவை அந்த மக்கள் இழந்து பத்தாண்டுகள் ஆகப் போகின்றன என்றும் அர்த்தம். அத்துடன் இந்த மக்கள் தமது நிலத்திற்காக போராடத் தொடங்கியும் பத்தாண்டுகள் ஆகின்றன என்பதும் இன்னொரு விடயம். எம்மை சுட்டுக்கொன்றாலும் நிலத்திற்கான போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று உரத்துக் குரல் கொடுக்கும் கேப்பாலவு மக்கள் 680 நாட்களைக் கடந்தும் தமது உக்கிரமான போராட்டத்தை தொடருகின்றனர்.
முல்லைத்தீவு கேப்பாலவு மக்கள் கடந்து வந்த பாதைகள் சொல்லி மாளாதவை. இந்த மக்கள் மேற்கொண்ட போராட்ட வழிமுறை மிகவும் கூர்மையானது. மிகவும் நெருக்கடி கொண்டது. அப்படி நெருக்கடி கொண்ட அந்தப் போராட்டத்தில்தான் உக்கிரமும் மிகுந்திருந்தது. இரவு பகலாக அந்த மக்கள் பனியிலும் வெயிலிலும் மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. கேப்பாபுலவு என்பது இந்த மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலம். அவர்கள் தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கிய நிலம். சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டவ்கள் கேப்பாபுலவு மக்கள்.
கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக சுமார் எண்பது ஏக்கர் நிலப் பகுதியை இந்த மக்கள் மீட்டிருந்தனர். 2017ஆம் ஆண்டு இதேபோல் ஒரு தை மாத்தில் இந்த மக்கள் தமது போராட்டத்தை பிலக்குடியிருப்பில் ஆரம்பித்தனர். பிலக்குடியிருப்பு விமான படை முகாமின் முன்பாக தகரக் கொட்டில்களில் இருந்து பனியிலும் வெயிலிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த மக்கள் நடத்திய போராட்டம் அவர்களின் பூர்வீக நிலத்தை வெல்ல வைத்தது.
நிலத்தை மீட்காமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று உக்கிரமாக பேசிய பெண்கள்தான் அப் போராட்டத்தின் நாயகிகள். இராணுவமுகாங்களை தகர்க்கும் அனல் கொண்ட அச் சொற்கள் சிங்களப் படைகளை அஞ்ச வைத்தன. ஈற்றில் வென்றுவிட்டன. கேப்பாபுலவில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதுவே அதன் முக்கியத்துவம்.
இந்த மக்களுக்கு மாதிரிக் கிராமத்தை அமைத்துக் கொடுத்துவிட்டோம் இந்த கேப்பாபுலவை விட மாட்டோம் என்று இன்று சொல்வதைப் போலவே அன்றும் இராணுவத்தினர் சொல்லினர். ஆனால் அந்த மாதிரி கிராமத்தை பார்த்த பொழுது அது இன்னொரு மெனிக்பாம் முகாமைப்போலவே தெரிந்தது. தடுப்பு முகாங்களில் வாழ்வது என்பது மாபெரும் சித்திரவதையே அங்கும் காணப்பட்டது. சொந்த நிலமே தடுப்புமுகாம் கோலத்திற்கு மாறியிருந்தது. உண்மையில் கேப்பாபுலவு மக்கள் ஒன்றை உறுதியாக தெரிவித்தனர். எமக்கு மாதிரிகள் தேவையில்லை. உண்மையான எங்கள் கிராமங்களே தேவை. அதனை திருப்பித் தரும்வரை போராட்டம் தொடரும் என்றனர்.
எங்கள் ஊரில் இருந்திருந்தால் எங்கள் வாழ்வு எப்படி மகிழ்வாகவும் செழிப்பாகவும் இருந்திருக்கும் என்பதையே மீண்டும் மீண்டும் உரைத்தனர். எங்கள் உழைப்பு எல்லாமே எங்கள் காணியில்தான் உள்ளது. வீடு, கிணறு, பயிர்கள், மரங்கள் எல்லாம் நாங்கள் வியர்வை சிந்தி உருவாக்கியவை என்கின்றனர் இந்த மக்கள். இதன் பின்னர், முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதான விமானப்படை முகாமின் முன்னால் பாரிய பீரங்கிகளுக்கு முன்னால் அடுத்த கட்டப் போராட்டத்தை இந்த மக்கள் மேற்கொண்டார்கள். சிங்கள இராணுவத்தின் மாபெரும் கோட்டையின் முன்னால் இரவு பகலென மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து கேப்பாலவு ஊடாக நந்திக்கடல் அருகா, வற்றாப்பளை செல்லும் வீதியை இராணுவத்தினர் மூடி வைத்திருந்தனர். அந்தப் பகுதிக்குள்தான் பாரிய இராணுவ முகாங்களை அமைத்து மக்களின் பல நூறு ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனை எதிர்த்தும் மக்கள் பல நூறு நாட்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். இந் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டில் சிங்கள இராணுவத்திடமிருந்து கேப்பலவு மக்கள் அந்த வீதியை மீட்டமை வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றுமொரு செயலாகும்.
தற்போது, 104 குடும்பங்களுக்குச் செந்தமான 181 ஏக்கர் காணிகள் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்கும் போராட்டத்திலும் மக்கள் உக்கிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 680 நாட்களை கடந்துள்ள நிலையில் மீண்டும் அந்த மக்கள் இராணுவ படைமுகாம் வாசலை முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியுள்ளனர். எமது பூர்வீக நிலத்தை விட்டு சிங்கள இராணுவமே வெளியேறு என்று மக்கள் உரக்க குரல் கொடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தினர் நவீன கருவிகள் மூலம் படங்கள் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
பல கோடி ரூபாய் செலவில், இராணுவ முகாம் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடைத்துத் தள்ளிவிட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயரும் போது, மேலும் பலகோடி ரூபாய்களைச் செலவிட நேர்வதனால் இராணுவத்துக்குப் பாரிய நட்டம் ஏற்படுவதாக, சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார். மக்களின் காணிகளில் பலகோடி செலவழித்து ஏன் கட்டங்களை நீங்கள் கட்ட வேண்டும். இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் காரணங்களா?
ஆனால். ஒரு அங்குலம் நிலத்தையும் இந்த மக்கள் விட்டுக்கொடுப்பதாக இல்லை. நிலத்திற்காக, நிலத்தின் விடுதலைக்கான ஓர்மத்தையும் உறுதியையும் கேப்பாபுலவுமக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய போராட்ட வடிவத்தை கையில் எடுக்க வேண்டும்? ஈழமெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்கு இந்த மக்களின் உன்னதமான போராட்டம் ஒரு முன்னுதாரணமாய் அமைந்துவிட்டது. விரைவில் சிங்கள இராணுவம் இந்த மக்களின் நிலத்தை விட்டு வெளியேறுவர். அதுவரையில் அவர்களின் போராட்டம் ஓயாது.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்