தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிரதிவாதிகள் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வை.எம். இசடீன் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொலைச் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வற்புறுத்தலுக்கு மத்தியில் வழங்கப்பட்டதே தவிர, சுயமாக வழங்கப்படவில்லை என வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
முதலாம் பிரதிவாதியான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் இரண்டாம் பிரதிவாதியான கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம் ஆகியோரால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டை நிராகரித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், அவர்கள் சுயமாகவே குற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21, 22 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், ஒன்று தொடக்கம் 7 வரையான மற்றும் 16 ஆம் இலக்க சாட்சியாளர்களை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.