குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஒருபுறம் இராணுவம் சுபீகரித்த மக்களது காணிகளை விடுவிப்பதாக நாட்டின் ஜனாதிபதி பிரச்சாரம் செய்யும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களது காணிகளை சுபீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இராணுவ தேவைக்கு வனவள திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு வகைகளில் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி அளவீட்டு பணிகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியில் இராணுவம் சுபீகரித்து வைத்துள்ள நிலையில் இராணுவம் அந்த காணியில் விவசாய செய்கையை மேற்கொண்டுவருகிறது
இந்த காணியை விடுவிக்குமாறு மக்கள் கோரிவரும் நிலையில் இராணுவம் விவசாயம் செய்துவருவதோடு இந்த காணியை கையக படுத்த பல்வேறு முயற்ச்சிகள் மேற்கொண்டுவந்துள்ளது.
தனியார் ஒருவருக்கு சொந்தமான இந்த காணியில் விடுதலைப்புலிகள் காலத்தில் மாவீரர் துயிலுமில்லம் உருவாக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான மாவீரகளது உடலங்கள் புதைக்கப்பட்ட இந்த காணி இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு துயிலுமில்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு காணி சுபீகரிக்கப்பட்டது.
தொடர்ந்து இராணுவத்திடம் இருந்து காணியை மீட்க மக்கள் போராடிவரும் நிலையில் இந்த காணிமற்றும் இதனோடு இணைந்த காணியை காணி உரிமையாளர் சம்மதத்தோடு காணியை அளவிட்டு சுபீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது அந்த வகையில் நிலத்தை அளவீடு செய்ய நில அளவை திணைக்களத்தினர் அந்த இடத்துக்கு வருகைதந்தனர்
இந்நிலையில் இந்த இடத்தில் ஒன்றுகூடிய மாவீரர்களது பெற்றோர் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் நில அளவீட்டை செய்யவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்
குறித்த காணி உரிமையாளருக்கு பல ஏக்கர் காணிகள் இருக்கிறது இது அவருடைய காணியாக இருந்தாலும் எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட நிலம் இதனை அளவிட்டு இராணுவத்துக்கு வழங்க இடமளிக்க மாட்டோம் எமது பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் விவசாயம் செய்கின்றனர் எந்த தேவையும் இல்லாது விவசாயம் செய்ய எமது பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தை பயன்படுத்துகின்றனர் இந்த காணியை துயிலுமில்லத்துக்காக இராணுவத்திடம் இருந்து மீட்டு வழங்க வேண்டும் இராணுவத்துக்கு வழங்க முடியாது என மக்கள் தெரிவிக்கின்றனர் மக்களின் எதிர்ப்பில் காணி அளவீட்டு பணிகள் இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டது.