தமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக், வாட்டில் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆய்வுக்குழுவினை அமைத்துள்ளது
நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இத்தகைய வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் அதிகம் உள்ளதனால் அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இந்த மரங்கள் ம ஏனைய தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் தன்மை கொண்டவை. இதனால் இந்த மலைப்பகுதிகளில் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான தாவரங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், வன விலங்குகளுக்கு உணவு தரும் தாவரங்கள் அழிந்து வருகின்றன.
இந்தநிலையில் இந்த வெளிநாட்டு மரங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர்கள் சிலரால் தொடரப்பட்ட வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தபோதே இந்த வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஆய்வுக் குழு அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்க வேண்டுமெனவும் அதன் அடிப்படையில் தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.