பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தேசிய நெருக்கடி எனத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா இதற்கெதிராக ஆண்களை அணிதிரளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் எனவும் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரமிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஆண்டுதோறும் ஆபிரிக்காவில் நாற்பதாயிரம் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடப்பதாக பதிவாகின்ற போதிலும் அங்கு இதனைவிட அதிகமாக பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கூடி இருந்த டர்பன் மைதானத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் ஆபிரிக்க ஆண்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குழந்தைகள் சிறுவயதிலேயே ஒருவரை ஒருவர் சமமாக மதிக்கவும், எந்த சூழ்நிலையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட கூடாது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.