யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கபட்டு உள்ள உயிரிழந்த தமிழக மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மூவர் அடையாளம் காட்டினார்கள். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.
பின்னர் கஞ்சா போதை பொருளுடன் மீனவர்கள் கைது என வெளியான தகவல்களை கடற்படையினர் மறுத்தனர். அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டமையால் தான் எட்டு மீனவர்களையும் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.
அதன் பின்னர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய முயன்ற போது அவர்கள் தப்பி ஓடும் போது இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது எனவும், அதனால் அந்த படகில் இருந்த மீனவர்கள் எட்டு பேரும் கடலில் தத்தளித்த போது தம்மால் காப்பற்றப்பட்டார்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த எட்டு மீனவர்களையும் கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் முயன்ற போது , மீனவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்களிடமிருந்து படகுகளை மீட்காதமையாலும் மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை என நீரியல் வளத்துறை தகவல்கள் தெரிவித்தன.
அந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கலையரசன் என்பவரது படகினை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
அதேவேளை எட்டு மீனவர்களையும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பொறுபேற்க மறுத்ததால் , அவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நேற்று இரவு ஒப்படைத்தனர். .
இந்த நிலையில் தமிழகம் இராமநாத புரத்தை சேர்ந்த கருப்பையா மாரிச்சாமி (வயது 55) எனும் மீனவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்திய சாலையில் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் உயிரிழந்த மீனவரின் படகில் இருந்தனர் என கூறப்படும் மூன்று மீனவர்களை காங்கேசன்துறை பொலிசார் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலத்தை அடையாள காண்பதற்காக அழைத்தது வந்தனர். குறித்த மூன்று மீனவர்களும் சடலத்தை அடையாளம் காட்டினார்கள்.
அதனை தொடர்ந்து குறித்த மூன்று மீனவர்கள் உட்பட எட்டு மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த காங்கேசன்துறை பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.