வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த மொழிக் குழுவின் தலைவராக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழுவின் உறுப்பினர்களாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் முன்னாளர் அதிபர் எஸ்.பத்மநாதனும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீஸனும், யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் திரு மொஹைதீன் ஹனி சேகு ராயீத்தும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(இரண்டாம் மொழி) திருமதி சுதர்ஷி பெர்னாண்டோ ஹப்புகொட்டுவ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் மொழி கொள்கைகளை அமுல்படுத்தும்போது எழும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தக் குழுவுக்கு அறிவித்து உரிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு இது தொடர்பான முறைப்பாடுகள் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் இருப்பின் அவற்றை தலைவர், மொழிக் குழு, ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, கண்டி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கோ அல்லது 021 221 9374 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்க முடியும்.
ஆளுநரின் ஊடகப் பிரிவு
15.01.2019