176
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதுபோன்று புதிய அரசியலமைப்பில் எதுவும் இல்லை என்றால், சம்பந்தரும் சுமந்திரனும் ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது புதிய அரசமைப்பொன்று தேவையில்லை என்றும் அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மகிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தரும் சுமந்திரனும் முட்டாள்களில்லை
வடக்கு கிழக்கு இணைப்பில்லை, ஒற்றையாட்சியே, பௌத்திற்கு முன்னுரிமை என பிரதமர் ரணில் கூறுகின்றபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதனால், அதில் ஏதோ இருக்கிறது என்றும் கூட்டமைப்பினர் முட்டாள்களில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் சொல்வதன் அடிப்படையில் குறித்த சொற்பதங்கள் இல்லாதிருக்கலாம் என்றும் நாட்டை பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருப்பதனாலேயே கூட்டமைப்பு, ஆதரிப்பதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் தந்திரம் எனக்குத் தெரியும்
ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் தனக்குத் தெரியும் என்றும் அவர் வடக்கு கிழக்கை தாரைவார்த்து விடுவார் என்றும் கூறிய மகிந்த, ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும் அவர்களுக்குப் பின்னால் பலம் பொருந்திய நாடுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தி, அரசாங்கத்தை அமைக்க வேணடும் என்றும், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
Spread the love