சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டீன் லக்கார்ட்டுடன், வொஷிங்டன் நகரில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் நிதி அமைச்சர் மங்கள சமரவிர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீள செயற்படுத்துவது குறித்து இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னேற்றகரமான பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இதன்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களையும் பலமான பொருளாதார கொள்கைகளையும் ஆக்கபூர்வமாக அமுல்படுத்துவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, கிறிஸ்டீன் லக்கார்ட் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சந்தைவாய்ப்புகள் வலுப்படுத்தப்படுவதுடன், இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சிறந்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பாகவும் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடனான கலந்துரையாடலில் இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.