ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவரும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உறவினருமான, உதயங்க வீரதுங்க மற்றும் அவரின் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பாரிய தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பின் 2 வங்கிகளிலிருந்து 4 கணக்குகளினூடாக 72 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பணம், உதயங்க வீரதுங்க தற்போது வசிக்கும் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
உதயங்க வீரதுங்கவிற்கு சொந்தமான கம்பஹா பகுதியிலுள்ள வணிக வங்கிக்கும், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை வங்கி வரைவுகளூடாக மீண்டும் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கணக்குகளுக்கு வௌிநாடுகளிலிருந்து பணம் கிடைத்துள்ள போதிலும், அது தொடர்பில் வங்கி முகாமையாளர் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என இதன்போது அரச சட்டத்தரணி உதார கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்கவின் மனைவி, அவரின் தாய் மற்றும் மனைவியின் சகோதரர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் துபாய் மற்றும் நோர்வேயில் வசிப்பதால், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் குறிப்பிட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு நீதிமன்றம் வௌியிட்ட திறந்த பிடியாணையின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு சவால் விடுக்கும் வகையில், உதயங்க வீரதுங்க சர்வதேச பொலிஸாரின் மத்திய பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அபுதாபி ஃபெடரல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும், பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து, தீர்ப்பு வழங்குவதை தாமதப்படுத்துவதற்கு உதயங்க வீரதுங்க செயற்பட்டு வருவதாக அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார். கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.