பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரெக்சிற் ஒப்பந்தம் தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்சிற் பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிற்றுக்கு ஆதரவாக வாக்களித்ததனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிற் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
பிரதமர் தெரசா மேயினால் கொண்டு வரப்பட்ட இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்திருந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சியான தொழிற் கட்சித் தலைவர் ஜெரமி கோபன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது