குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். அதன்போது தாக்குதலாளி, தனது மோட்டார் சைக்கிளில் கொட்டனுடன் வந்து, காவல் நிலையத்தினுள் புகுந்தும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார்.
அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கானவர் மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதலாளியை கைது செய்யுமாறு கோரினர். எனினும் காவல்துறையினர் அசமந்தமாக நடந்து கொண்டதால் தாக்குதலாளி காவல் நிலையத்தில் இருந்த கதிரைகளைத் தள்ளி விழுத்தி அங்கு அட்டகாசம் செய்துவிட்டு அங்கிருந்து காவல்துறையினரின் விடுதிகளுக்கு ஊடாக தப்பித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்தநிலையிவ் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேகநபர் சார்பிலும் பாதிக்கப்பட்டோர் நலன்சார்பிலும் இளம் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.
‘சந்தேகநபருக்கு எதிராக முன்னரும் இதே மன்றில் வழக்கு உள்ளது. அந்த வழக்கும் நபர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில்தான் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், அவருக்கு எதிராக வேறும் பல முறைப்பாடுகள் உள்ளன’ என்று காவல்துறையினர்; மன்றுரைத்தனர்.
‘சந்தேநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சையளிக்க உத்தரவிடவேண்டும்’ என்று சந்தேகநபரின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.