மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் தெரிவித்துள்ளது.
சுமார் 117 பேர் இருந்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ள போதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 53 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு கப்பலொன்று, மத்திய தரைக்கடலின் மேற்குப்பகுதியிலுள்ள அல்போரான் கடற்பரப்பில் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூறப்படுகிறது.
கப்பல் கவிழ்ந்தபோது 24 மணிநேரங்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டு மொரோக்கோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் கப்பல் எந்த பகுதியில் கவிழ்ந்தது, அதிலிருந்தவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டாவது கப்பல் கடந்த சனிக்கிழமை லிபியாவிலிருந்து புறப்பட்டதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.