வெனிசுலாவில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில் ஜனாதிபதி மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எனினும் அவரது வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் மதுரோ 2-வது முறையாக ஜனாதிபதியாவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த போதும் அவர் உச்சநீதிமன்றில் முன்னிலையில் முன்னிலையில் 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில், மதுரோவுக்கு எதிராக, கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என வீடியோ மூலம் அழைப்பு விடுத்தனர்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது அவர்களை காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.