https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2285330175037804/
இந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த முயற்சி வெற்றியளித்தால், வந்த காரியம் முடிந்துவிட்டதென விலகுவதாகவும் இல்லையாயின் தோல்வியடைந்தால், தொடர்ந்தும் அரசியலில் இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்வதா? அல்லது அரசியலை விட்டு விலகுவதா என்பது தொடர்பில், தீர்மானமொன்றை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு, நேற்று முன்தினம் (21.01.19) இரவு வழங்கிய நேரலை நிகழ்ச்சியொன்றின் செவ்வியின் போது தொடர்ந்துரைத்த அவர், அரசமைப்பை நிறைவேற்றாது, அடுத்த தேர்தலொன்றுக்குச் செல்வோமாயின், தமது கட்சி, வாக்குப் பலத்தைப் பெற்றுக்கொள்வது, பாரிய சிக்கலாக இருக்குமென்றும் தமது கட்சிக்கு எதிராக, இனவாதிகள் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் தம்மிடம் ஆதரவைக் கோரினால், அது குறித்து அப்போது தான் தீர்மானிப்பதாகவும் அரசியலில் இருக்கும் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், சுமந்திரன் கூறியுள்ளார்.
“புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரப் பாடுபடுவேன், இல்லையேல் அரசியலை விட்டு விலகுவேன் என வாக்குறுதியளித்தே, அரசியலுக்குள் நான் பிரவேசித்தேன். அதனால், அரசமைப்பை நிறைவேற்றும் விடயத்தைக் கொண்டு, என்னுடைய அரசியல் பயணம் தீர்மானிக்கப்படும். ஆனால், இதுவரையில் அவ்வாறானதொரு தீர்மானத்தை நான் எடுக்கவில்லை. “அரசமைப்பை நிறைவேற்ற முடியுமென்ற உறுதி என்னுள் இருக்கிறது. இருந்தாலும், அதைச் செய்ய முடியாவிட்டால், நான் என்னுடைய முடிவை எடுக்க வேண்டும். காரணம், அரசியலுக்காக, அரசியல்வாதியாக நான் என்னுடைய வாழ்க்கையைக் கொண்டுசெல்ல விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்தில், 78ஆம் ஆண்டு அரசமைப்பில் உள்ளதை, அப்படியே அரசமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். தவிர, அனைத்து மதங்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரை செய்துள்ளோம். இதில், பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பெரும்பான்மையினரின் வாதமாக இருப்பின், அதையே தொடர்வதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எமது மக்களுக்கு, நாம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா? ஏன் எமது மதங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாதென்ற ஒரு எண்ணம் இருக்கின்றது” என்றும், சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய, தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அந்தப் பெயரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும், தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஸவை வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.
“புலிகள் பயங்கரவாதிகள் என்றால், அவர்களை அழிக்க அரசு நடந்துகொண்ட முறையும் ஒருவித பயங்கரவாதம் தான். வடக்கு மாகாண சபை, முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன். இனி அதனை நாங்கள் சரியாகக் கையாள்வோம்.
“புதிய அரசமைப்பு வராது. நீங்கள் வீணாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்கள் தரப்பில் என் மீது விமர்சனங்கள் செய்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வந்தாக வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
“ஒற்றை ஆட்சி என்றால், ஓரிடத்தில் ஆட்சி நிர்வாகம் இருக்கும். அப்படியானால், எப்படி நீங்கள் அதிகாரத்தைப் பகிர்வீர்கள்? நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரத்தைப் பகிருங்கள். அதையே கூறுகிறோம். ஒருமித்த நாடு அல்லது ஒன்றுபட்ட நாடு என்று கூறலாம் என்று நான் யோசனை முன்மொழிந்தேன். அதில், ஒருமித்த நாடு என்று குறிப்பிடுவது நல்லதெனத் தீர்மானித்தார்கள்.
“தெற்கில் மட்டுமல்ல, வடக்கிலும் இது புரியாமல் உள்ளது. சமஷ்டி இல்லையென டெலோ என்ற எங்களின் பங்காளிக்கட்சி கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்தச் சிந்தனை இருக்கக் கூடாதென, நான் மக்களிடம் சொல்கிறேன். இதே சில வருடங்களுக்கு முன்னர் நான் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தால், பின்னர் எப்படி திரும்பி வந்திருப்பேன்?
“அரசமைப்பு என்பது சமூக ஒப்பந்தம். அதனால் தான், அனைவரதும் இணக்கம் இதற்குத் தேவையெனக் கருதப்படுகிறது. இவ்வளவு பிரச்சினைகள், உயிரிழப்புகள், சேதங்களுக்குப் பின்னர், வடக்கு, கிழக்கு மக்கள் இன்னமும் ஏன் சமஷ்டி கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள்? காரணம், அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு பிரச்சினை இல்லையென நினைக்காதீர்கள். இது முக்கியமா என்று கேட்பதும் பிழை. அரசமைப்பை எங்களால் செய்ய முடியாமல் போனால், எமக்கெதிரான சக்திகள் தலைதூக்குமென அவர் மேலும் கூறினார்.