கேரளாவில் நாளொன்றுக்கு சராசரியாக 5 பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாக காவல்துறை இணைய தளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாக பெண் ஆர்வலர்கள் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் கேரள காவல்துறையினரின் இணையதளத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது.
இதில் கடந்த ஆண்டு மட்டும் கேரளாவில் 2015 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை வழக்குகள் பல மடங்கு அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 721 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 2059 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் கடந்த ஆண்டு இது 2043 வழக்குகளாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் தெரிவிக்க தயக்கம் காட்டி வந்தனர். தற்போது இந்த நிலைமை மாறி உள்ளது. அவர்களுக்கு வன்கொடுமை நடந்தால் உடனே அதுபற்றி புகார் செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என பெண் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.