அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக தெரிவித்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டி குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் 16 வயதுச் சிறுவன் ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 1980 களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்க்கை தாக்குவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இந்த சதித்திட்டம் தொடர்பில் ஒரு பாடசாலைச் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று ஆண்களும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் இஸ்லாம்பெர்க் சமூகம், தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கும் முகமாக இருக்கிறது என சிலர் குற்றம்சுமத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.