குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மடு பிரதேச கிராமிய அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து இன்று புதன் கிழமை (23) காலை மடு பிரதேசச் செயலக நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 76 கிராமங்களைக் கொண்ட 25 கிராம மட்ட அமைப்புக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலை 8 மணியளவில் மடு பிரதேசச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடியதோடு,மடு பிரதேசச் செயலகத்தினுள் எவரையும் செல்ல விடாது கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வீதிகள்,உள்ளக வீதிகள் செப்பணிடப்படாமை, வீதி மின் விளக்குகள் பொருத்தாமை, குடிநீர் வசதிகள் இன்மை, உரிய போக்குவரத்து சேவைகள் இல்லாமை,மருத்துவ சேவைகள் இல்லாமை, கசிப்பு உற்பத்தியை உடன் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை,வளங்கல் சுரண்டப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கும் வகையில் மடு பிரதேசச் செயலாளர் ஜெயகரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மடு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற இருந்த வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்த போது நுழைவு வாயிலில் மறித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்ததோடுகோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் மனேகணேசன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உடனடியாக கவனம் செலுத்தி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்ததனையது;து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.